
உண்மையில் ஆன்ம விசாரம் இவற்றுக்கும் அப்பாற்பட்டது. ஒரு விளையாட்டரங்கின் அருகே வசிப்பதாலோ, விளையாட்டுச் செய்திகளை படிப்பதாலோ, ஒரு விளையாட்டு வீரருடன் சினேகிதித்துக் கொள்வதாலோ நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் ஆக மாட்டீர்கள் என்பது எத்தனை யதார்த்தமோ அதை விட அதிக சிரமமானது ஆன்ம நிலையை உணர்வது. கோயில்களிலோ, ஆஸ்ரமங்களிலோ வெறுமனே வாய் வலிக்க பஜனை பாடுவதால் உங்கள் கர்வம் தவறான முறையில் ஊட்டங்கண்டு விடும். அப்படிப் பட்டவர்களை நாம் சந்தித்துள்ளோம். பரிதாபமாக, அவர்கள் தேங்கிவிட்ட நீராகிப் போவர். இதிலிருந்து மீள ஒரு தூண்டல் வேண்டும்.
நாம் இன்பத்தையடைய செய்யும் முயற்சிகளில் காற்பங்கு கூட துன்பத்திலிருந்து வெளியேறுவதற்கு செலவளிப்பதில்லை. படிப்பு, வேலை, திருமணம் என எதை எடுத்தாலும் கடவுளை வேண்டும் அதே சமயம் அக்காரியங்களில் இயன்ற முயற்சி எடுக்கும் நாம், துன்பப்படும் போது முற்று முழுதாக கடவுள் பார்ப்பான் என்று முயலாது இருப்பது அறிவுடைமை அல்ல. நன்றாக படிக்கும் ஒருவர் இறைவனை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் நல்ல பெறுபேறு அடைவது உறுதி. இதற்கு மறுதலை எதிர் விளைவையே தரும். சரி, அப்படியானால் ஏன் கடவுள்?
துக்கம் கூட வெட்கம் அறியாது. துன்பத்தில் நீங்கள் நீங்களாக இருப்பது கடினம். உடற்தொழிலியல், மனம் என சர்வமும் ‘அடி’பட்டு விடும் நிலையில் நம்மை நாம் காண ஒரு மூன்றாம் இடம் நமக்கு தேவை. அதை இறை வழிபாடுகள் நிகழ்த்துகின்றன. மனம் பேதலித்த துயரத்திலும் ஒருவரால் மனம் ஒருமிக்க முடியுமானால் அது மனதின் வளர்ச்சிக்கு, உயர்வுக்கு வழிகோலும். முடிவில், துன்பத்தில் இருந்து மீள்பவர்கள் முன்னிருந்ததை விட அதிக உறுதியுடன் எழுவது திண்ணம். அவர்களால் அதிக வலிமை கொண்டு போரிட முடியும். வென்றவன்? அவனுக்கும் வெற்றியினால் நிதானம் இழக்காத நிலை இறைவழியால் அணுகப்படுகிறது. இதற்கும் ஒரு ஆற்றல் வேண்டும்.
கோயிற் திருவிழாக்களில், பாமரத்தனமான வேண்டுதலில் தான் ஆஸ்திகரும், நாஸ்திகரும் கடவுளைக் காண்கிறார்கள். அதனால் தமது கொள்கையில் தோற்கிறார்கள். இன்று, CEOக்கள், மேலாண்மையாளர்கள், தொழினுட்பவியலாளர்கள் போன்ற(மூளை) வேலைப்பளு கூடியவர்களுக்கு அவர்களின் stress relief ஆக கம்பியூட்டர் கேம்ஸ், செக்ஸ் உறவுகள், வெளிக்கள விளையாட்டுகள் என பரிந்துரைக்கப் படுகிறது. கூலி வேலை செய்வோர் சாராயக் கடையை அல்லது சினிமா தியேட்டரை நாடுகின்றனர். அது போல, அன்றைய காலங்களில் கோயில் திருவிழாக்கள் ஏற்படுத்தப் பட்டவை என கூறுகிறார்கள். இதில் உள்ள முறைகேடுகள் சமயம் சார்ந்தவை அல்ல, மாறாக அது சமூக மனம், சூழல் தொடர்பு பட்டது. அதை பின்னர் பார்போம்.
என்வே, ஆன்ம வழி செல்வோர் இந்தப் புறக்களியாட்டங்களில் தொடர்ந்து நிலை பெறாமல் அகப் பயணத்திற்கான முறைகளைப் பயில வேண்டும். ஒருவரின் வழி இன்னொருவருக்குப் பொருந்தா. எனவே பொருத்தமானதை வழிகாட்டிகளை அடைந்தோ, ஒவ்வொரு வழியாக முயன்றோ கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு குரு வேண்டும்.
கோயில்களிலும், மடாலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும் அவ்வழிகளை அடைய முடியாதவ்ர்களும், ஆன்மீகத்துக்கு தயார் இல்லாதவர்களும் பல சமயங்களில் துஷ்ட செய்கைகளில் ஈடுபடுவதையும், தவறான முன்னுதாரணமாக விளங்குவதையும் காணலாம். இவர்களை இறைக் கொள்கையுடன் பொருத்த தேவை இல்லை. உங்கள் வாகனச் சக்கரத்தில் அழுக்குப் பட்டால் வாகனத்தை எரிப்பீர்களா? அது போல், இந்த கயவர்களை விலக்கி விடுங்கள் அல்லது விலகி விடுங்கள்.
ஏன் ஆன்மீக முறைகள் தேவை? அதை அடையாதிருப்பதால் என்ன கேடு?
இயற்கையில் ஒவ்வொரு கூறும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. அது ஒரு நிலைபேறடையும் வரையில் இது தொடர்கிறது, அடைந்த பின் மீண்டும் (வேறு நிலைக்குத்) தொடர்கிறது. சிறு மாற்றங்கள் பெரு விளைவுகளாக தோற்றம் பெறுகின்றன. ஒரு சிறு கல் கல்லாகவே இருப்பதில்லை, அது மண்ணாகவோ அதை விட நுண் துகளாகவோ மாறிக்கொண்டிருக்கிறது. துகள்கள் மலையாகவும் மாறும். ஒரு buffer condition யை அடையும் வரையில் அத்தனை பொருட்களும் மாறிக் கொண்டிருக்கின்றன. இது மனிதருக்கும் பொருந்தும்.
இம்மாற்றங்கள் புறத்தொடர்பிலான உறவு மாற்றமல்ல. ஏழை பணக்காரனாதலும், பணக்காரன் ஏழையாதலும், அழகன், குரூபி, படிப்பு போன்றவற்றுக்கு ஞானிகளும், முன் பயணித்தவர்களும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நீங்களும் அணுத்துகள்களால் ஆனவர்கள். அணுதவிர்ந்த அதி நுண்துகள்களும் அறியப்பட்டுள்ளன. அறியப்படாத பொருட்களும் இருப்பதற்கு இன்னும் சாத்தியம் உண்டு. அணுக்களால் ஆக்கப்பட்ட உடலே ’நாம்’ என்பவர்கள் இத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.
மூலகங்களாலும் அவற்றின் அணுக்ககளாலும் நமது உடல் கருப்பையில் ஆக்கப் பட்டபின் வெளியேறி காலங்கள் கடந்து முதுமை அடைந்து மரணிக்கிறது. இரும்புக்கு பாதுகாப்பு கவசங்கள் இடாத பட்சத்தில் அது துருவடைந்து வெறு சேர்வைகளாகி விடுவது உண்மை. உடலையும் எந்த பராமரிப்பும் இல்லாது விடும் போது அதன் இயல்பில் மரணத்தை நெருங்கி விடும். அதற்காக கண்டறியப்பட்ட முறைகளே இந்திய இறை வழிபாடுகள்.
மரணத்தை வெல்லல் அல்லது தள்ளிப்போடுதல் என்பதன் பொருள் மரணத்தில் அச்சம் அல்ல. ஒரு பொறியியலாளர் 55 வயதை நெருங்கி விட்டர் ஆனாலும் அவரின் குழந்தைகள் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. அவர் இன்னும் 10 வருடம் வேலை செய்து சம்பாதிக்க விரும்புவார் தானே? அது போல், பல வித்தைகளுக்கும் அவை அறியப்பட்ட அதிக ஆயுள் அவசியம். அதற்காகவே இந்திய யோகிகள் உடல் பேணும் முறைகளை போதித்தார்கள். ஆன்ம நாட்டம் உடையவர்கள் உடல் பேணுதல் நன்று.
சடப்பொருட்களில் அணுக்களுடன் மின்காந்தப் புலம் போன்றவையும் ஒளிக்கதிர்களும் தங்கியுள்ளன. இவ்வலைகள் இச்சடபொருட்களில் புதிதாக சேர்ந்தோ அல்லது விட்டு விலகியோ செல்லக்கூடியன. இது சடப்பொருட்களின் மின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப நிகழும். மின் காந்த அலை மாறுதலுக்கு இரசாயன, பெளதீக மாற்றங்கள் காரணமாகும்.
இது போல, யோகிகள் மனிதர்களின் சக்தி விளையாட்டினை மெருகூட்டிச் சென்றார்கள். பாரத கண்டத்தில் பல இடங்களிலும், பலராலும், பல விதமான முறைகள் பின் பற்றப்பட்டு, பின்னர் அவற்றிக்கிடையான ஒற்றுமைகள் அறியபடுமிடத்து அவை ஒரு சேர ஹிந்து மதமாக அறியப்பட்டது. இதற்கும் ஆதி வரலாற்றுக்கும், இந்திய நாகரிகத்துக்கும் தொடர்பு காணல் நேர விரயம்.
எந்த முறையில் உடலில் இரசாயன (chemical), பெளதீக (physical), பொறி (mechanical) மாற்றங்களை மேற்கொண்டால் பிரபஞ்ச சக்திகளை அதிகம் தாங்கிக் கொள்ளலாம் என்பதின் இரகசியமே உண்மை ஆன்மீகத்தின் தேடு பொருள்.
சரி இந்த சக்தியை கொண்டு என்ன செய்வது? சேர்த்து பாருங்கள், தெரியும். நீங்கள் ‘அந்த’ உலகத்தில் பிசி ஆகி விடுவீர்கள்.
அறிந்து தேடுவோம்...
No comments:
Post a Comment