தீவிர போக்குடையவர்கள் (Fundamental Extremists) பெரும்பாலும் ஒரு ஒற்றுமையை விடாப்பிடியாக வெளிப்படுத்துகிறார்கள். ’நான் நம்புவதை நீயும் நம்பு, அல்லது அழிந்து போ’ என்பது தான் அது. மேற்கத்தைய மதங்கள், கம்யூனிஸவாதிகள், ஈழப்புலி ஆதரவாளர்கள், சில அரசியற் கட்சிகள், பிரிவினைவாதிகள், சிங்கள-பெளத்த பேரினவாதிகள், இந்தியாவிலுள்ள நாஸ்திகர்கள், நாஜிக் கொள்கையுடைய வெள்ளைத் தோல் சாதி வெறியர்கள் என இவர்கள் பட்டியல் நீள்கிறது. நிச்சயமாக இங்கு அவர்கள் தூக்கி வைத்திருக்கும் கொள்கைகள் காரணமில்லை.
இதன் பின்னணி மனோதத்துவத்தில் ஆராயப்படுகிறது. மனதின் தன் முனைப்பு (ego)தனது ’இருத்தலை’ பல விதங்களிலும் வெளிப்படுத்த தலைப் படுகிறது. அது மனப்பாசாங்கு (Hypocrisy) வரை சென்று வன்முறையில் அடம்பிடிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தனித்துவமாக அடையாளப் படுத்தவே முயல்கிறான். ஆரோக்கியமான ஆரம்ப நிலைகளில் தனக்குரிய படிப்பை, பணத்தைச் சம்பாதிப்பதிலிருந்து சமூகத்தில் மதிக்கப்படும் நிலை அடையும் வரை இது செல்லும் அதே வேளை, ஒரு குழு அடையாளத்திற்கு (மதம், மொழி போன்றவை) கீழே ஒன்று சேர்ந்து ‘தன்னை’ நிரூபிக்கும் வேகம் வியாபிக்கிறது. இப்படியான மனப்போக்குள்ளவர்கள் சில தீவிர மதங்களையும், தீவிரவாத குழுக்களையும், கொள்கைகளையும் உருவாக்கி விட்டது தான் தூரதிஷ்டமாகும். இவர்களும் இவர்கள் வழியில் தம்மை அடையாளப்படுத்த முனைபவர்களும் சமூகத்திலும், பின்னர் உலகத்திலும் பன்முகத்தன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலாயிருக்கின்றனர். இவர்களின் ’தூய’ உலகத்தில் ஒற்றுமை எனப்படுவது தம்மைத் (அவர்கள் கொள்கை) தவிர வேறு எவரும், எதுவும் இருக்கக்கூடாது.
இங்கு இந்திய மதங்களை விட்டது போன்ற குறை வரலாம். இந்திய சித்தந்தங்களை அடிப்படையாகக் கொண்டு நீடித்த காலத்துக்கு, பரந்துபட்டளவில் வன்முறை இயற்றப்பட்டதில்லை. ஏனெனில், இந்திய மதங்கள் பன்முகத்தன்மைக்கு என்றுமே அச்சுறுத்தலாய் இருப்பதிலலை. இருந்த போதிலும், சில நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரிவுகளின் பின்பற்றுனர்கள் சனாதன தர்மத்தின் அடிப்படைக்கு முரணாக உள்ளதையும் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, சத்திய சாய் பாபா அடியார்கள், தீவிர வைஷ்ணவ குழுக்கள் போன்றன.
தற்கொலை செய்பவர்கள், அது என்ன காரணமாக இருப்பினும், ஒரே புள்ளிவிபரத்துக்குள் அடைக்கப் படுவது போல ஒரே மனப்போக்குள்ள இவர்கள் ஏதாவது ஒரு பதாகை பொறித்த கொட்டகையினுள் ஒன்று சேர்வதன் மூலம் தம்மைத் தனிமைப் படுத்தி விடுகின்றனர். ஊனுண்ணும் விலங்குகள் தம்மை எதிர்க்காத தாவரவுண்ணிகளை இரை கொண்டாலும் இரையின் இருப்பை அழிக்க முயலா. ஆனால், ஊனுண்ணிகள் தம்மையொத்தவற்றை உயிர்வாழ விடா. தம்மை, தம் கொள்கைகளை வன்முறையில் நிலைனிறுத்த முயலும் மனநோயாளிகள் தமக்குள் மோதி தம்மை அழிக்கும் சாத்தியமே எப்போதும் உள்ளது.
6 hours ago
No comments:
Post a Comment